இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வரக்கூடியவை. இந்த எல்லைகள் தான் வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பகுதிகளை விட பதற்றம் நிறைந்தவையாக இருக்கிறது. காஷ்மீரை தவிர மற்ற மூன்று மாநிலங்களையும் பாகிஸ்தான் எல்லைகளை எல்லை பாதுகாப்பு படை தான் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுடன் ஆன 3,300 கிலோ மீட்டர் எல்லை பகுதியில் சுமார் 500 கிலோ மீட்டர் எல்லை பகுதி குஜராத் மாநிலம் கட்சி மாவட்டத்தில் வருகிறது.

அதே போல் தார் பாலைவனத்தின் தொடர்ச்சியான வறண்ட நிலப்பரப்பு, சதுப்பு நிலப்பகுதிகள் மற்றும் உப்பு பாலைவனமும் குஜராத்தின் பாகிஸ்தான் உடனான  எல்லையாக இருப்பதால் எல்லையை கண்காணிப்பதும் பாதுகாப்பை மேம்படுத்துவதும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சவால் நிறைந்த பணியாக இருந்து வருகிறது. சுக்கூர் எனும் மிகப்பெரிய பரந்து விரிந்த ஏரியின் ஒரு பகுதியை பாகிஸ்தானும் மற்றொரு பகுதியை இந்தியாவும் பங்கிட்டு கொள்கிறது. இதன் மையப் பகுதியில் சாலையை ஏற்படுத்தி பாதுகாப்பு வேலியையும் அமைத்து இந்தியா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சில மைல் தூரம் கடந்ததும் சதுப்பு நில பகுதி தொடங்குவதால் அங்கு இந்தியா பாகிஸ்தான் இருநாட்டிற்கும் எல்லைவேலி இதுவரை இல்லை.

இந்நிலையில் தற்போது தான் சதுப்பு நிலத்தில் எல்லை வேலைகளை அமைக்கும் பணி தொடங்கி உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு – காஷ்மீரில் இந்த ஸ்மார்ட் பென்ஸ் பரிசோதனை முறையில் அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. அதேபோல் குஜராத் மாநிலத்தின் இந்த எல்லை பகுதியிலும் முதற்கட்டமாக 13 கிலோமீட்டர் தொலைவிற்கு பரிச்சாத்த முறையில் ஸ்மார்ட் பென்ஸ் என்னும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வேலியை அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நவீன மேம்படுத்தப்பட்ட வேலியில் விரலைகூட நுழைக்க முடியாதபடி வேலி அமைக்கப்படும்.

தற்போது இருக்கும் முள்வேலிகளை போல் அல்லாமல் எளிதில் உடைக்க முடியாத துருப்பிடித்து பழுதடையாத விதமாகவும்  அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக எல்லை பகுதியில் வெளிநாட்டவர்கள்  ஸ்மார்ட் பென்ஸ் வேலியை தொட்டால் சென்சார் மூலமாக தகவல் கிடைக்கும் விதமாக வடிவமைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை யாரும் இந்திய எல்லைக்கு ஊடுருவி வந்தால் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கும் தொடர்பு வசதியும் ஏற்கனவே அமலில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.