டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல்  மாநாடு -2023 நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு பின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. இந்த அளவுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை. மேலும் நாட்டின் தொழில்நுட்ப மனித வளத்தின் பயன்பாடு மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நம்முடைய நாட்டில் முதியோர் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உறுதிப்படுத்துவதற்கு தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

இதனால் உறுப்பு தானம்  செய்பவர்கள் முன் வருவார்கள். அதே போல் பயிற்சி திட்டங்கள் மற்றும் புதிய படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யத்தக்க அந்த மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதன் காரணமாக  அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்  அதிக எண்ணிக்கையில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.