பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை  நடத்த உள்ளன. 2003 உலக கோப்பை தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா ? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 10 அணிகள் பங்கேற்ற 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. அகமதாபாத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மூன்றாவது முறையாக உலக கோப்பையை வெல்ல இந்திய அணியும்,  ஆறாவது முறையாக உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய  அணி அதே உத்வேகத்துடன் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் உலக கோப்பையில்  தொடர்ந்து 11 ஆட்டங்களை வென்ற இரண்டாவது அணியாக இன்று சாதனை படைக்கும்.

ஏற்கனவே இந்த சாதனை இரண்டு முறை படைத்த ஒரே அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 150 போட்டிகளில் ஆஸ்திரேலியா 83 போட்டிகளிலும்,  இந்தியா 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 10 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. ஒரு நாள் உலகக் கோப்பையில் இதுவரை இரு அணிகளும் மோதிய 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா 8-க்கு 5 என முன்னிலையில் உள்ளது.  கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3-க்கு 2 என முன்னிலையில் உள்ளது.