இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது..

டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் தோற்கடிப்பது இதுவே முதல்முறை. அவுஸ்திரேலியாவுக்கு முன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மேலும் 4 அணிகளை வீழ்த்தியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புள்ளி விவரம் :

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், 6 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளதுடன், 27 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு முன்னர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்கடித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிகபட்சமாக 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

டெஸ்ட் வடிவத்தில் இந்திய பெண்கள் அணியின் செயல்திறன் :

  1. இங்கிலாந்துக்கு எதிராக 3 வெற்றி
  2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 வெற்றி
  3. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1 வெற்றி
  4. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 வெற்றி

8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது :

இந்திய மகளிர் அணிக்கும், ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்தார். ஆனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி.,அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும், பெத் மூனி 40 ரன்களும், அலிசா ஹீலி 38 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளும், சினே ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 406 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 78 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 74 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்களும் எடுத்தனர். மேலும் ரிச்சா கோஷ் 52, பூஜா வஸ்த்ரகர் 47, ஷபாலி வர்மா 40 ரன்களும் எடுத்தனர். அதே சமயம் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய அணியால் 261 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில், 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு எட்டியது. இந்திய அணியில் ஷபாலி வர்மா 4 மற்றும் ரிச்சா கோஷ் 13 ரன்களில் அவுட் ஆனபோதிலும், ஸ்மிருதி மந்தனா 38 ரன்களுடனும், ஜெமிமா 12 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்து போட்டியை முடித்தனர்.

முன்னதாக, டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த ஒரே டெஸ்டில் இங்கிலாந்து மகளிர் அணியையும் இந்தியா 347 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அடிப்படையில் இங்கிலாந்துக்கு எதிராக எந்த அணியும் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.