இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டியின் போது மழை குறுக்கிட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் மைதான ஊழியர்களுக்கு ஆடுகளத்தை மூட உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்று போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே  கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த சூப்பர் ஃபோர் சுற்றில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஷாகின் அப்ரிடியின் முதல் ஓவரில் 5 பந்தில் ரன் எடுக்காத நிலையில், கடைசி பந்தில் சிக்சர் உடன் ஆரம்பித்தார். அதேபோல மறுபுறம்  கில் பவுண்டரியாக அடித்து மிரட்டினார். முதலில் பொறுமையாக ஆரம்பித்த ரோகித் சர்மா பின் சதாப் கான் ஓவரில் சிக்ஸர்களாக விளாசினார். இருவருமே சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.

 

இந்திய அணி 100 ரன்களை கடந்தது. பின் ரோகித் சர்மா ஷதாப் கான் வீசிய 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஷஹீன் அப்ரிடியின் 17வது ஓவரில் கில் அவுட் ஆனார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர்.

அப்போது திடீரென கருமேகங்கள் சூழ மழை வரத்தொடங்கியது.  ஊழியர்கள் ரெடியாக மைதானத்திற்கு வெளியே தார்பாயை பிடித்து வேகமாக மைதானம் உள்ளே ஓடிவந்தனர். அப்போது பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான் மைதான ஊழியர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு உதவும் விதமாக தார்பாயை இழுத்துக் கொண்டு ஓடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்..

மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் ஒருவேளை இன்று தொடங்க முடியாத பட்சத்தில்  ரிசர்வ் டேவான  நாளைய நாள் போட்டிவிட்ட இடத்திலிருந்து தொடங்கும். இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கோலியும் (8 ரன்கள்), ராகுலும் (17 ரன்கள்) ஆடி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2 போட்டியில் கே எல் ராகுல் காயத்தால் ஆடாத நிலையில், இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு (முதுகுவலி காரணமாக) பதிலாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பும்ரா அணிக்கு திரும்பியதால் முகமது ஷமி வெளியேறினார். இன்று டாஸ்க்கு வந்த ரோஹித் ஷர்மா, ஸ்ரேயார் ஐயருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்குப் பதிலாக கேஎல் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.