டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார்.

22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்தியர் ஆனார். 179 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால், விசாகப்பட்டினத்தில் 2-வது நாளில் 277 பந்துகளில் தனது சாதனையை (இரட்டை சதம்) முடித்தார். மொத்தமாக அவர் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 209 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட்டாக்க ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸ் முடிந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். ஜெய்ஸ்வால் , 22 வயது மற்றும் 37 நாட்களில் தனது சாதனையை 277 பந்துகளில் முடித்தார், ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை 350+ ரன்களுக்கு வழிநடத்தினார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வாலுக்குப் பிறகு  இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் சுப்மன் கில் அடித்த 34 ரன்களாகும். அடுத்ததாக அறிமுக வீரர் ரஜத் படிதார் அடித்த 32 ரன்களாகும். துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் தனது இரட்டை சதத்தை விளாசினார். முன்னதாக, ஜெய்ஸ்வாலின் அதிகபட்ச ஸ்கோர் 171, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக போட்டியில் ஜெய்ஸ்வால் இந்த ஸ்கோரை அடித்திருந்தார்.

டெஸ்டில் இரட்டை சதம் அடித்த 4வது இடது கை வீரர் ஜெய்ஸ்வால் ஆவார். வினோத் காம்ப்ளி, சவுரவ் கங்குலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் இதற்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். முன்னாள் பேட்டர், வினோத் காம்ப்லி 21 வயது 35நாட்களில் இங்கிலாந்துக்கு எதிராக வான்கடேயில் 1993 இல் தனது சாதனையை எட்டியபோது இரட்டை சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனையை எட்டிய இரண்டாவது இளம் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ஆவார். அவர் 21 வயது 277 நாட்களில் எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்டட், இவர் தனது 19 வயது 140 நாட்களில் சாதனை படைத்துள்ளார்.

ஜெய்ஸ்வாலின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 112 ஓவரில் 396 ரன்கள் எடுத்தது. பின்னர் தற்போது இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்களாக சாக் கிராலி (34* ரன்கள்) மற்றும் பென் டக்கெட் (20* ரன்கள்) இருவரும் களமிறங்கி ஆடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது.