ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது..

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்திற்கு சென்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், ஃபினிஷர் ரிங்கு சிங் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் இருவரும் சிறப்பான இன்னிங்ஸ் மூலம் இந்திய அணியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு வந்தனர். ஆனால் 20வது ஓவரில் 3 பந்துகளில் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் கடைசி பந்தை எட்டியது. ஆனால் ரிங்கு ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் கடைசி பந்து நோ பால் என்பதால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இந்த வெற்றியின் மூலம் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் வெற்றியுடன் தொடங்கியது. மேலும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 80 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 39 பந்துகளில் 58 ரன்களில் அரை சதம் அடித்தார். ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்த நிலையில் திரும்பினார். திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 2 ரன்களில் வெளியேறினார். துரதிர்ஷ்டவசமாக ருதுராஜ் கெய்க்வாட்(0) முதல் ஓவரில் ஒரு பந்தையும் சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். மேலும் ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் (0) கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகினர்.. முகேஷ் குமார் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் தன்வீர் சங்கா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், மேத்யூ ஷார்ட் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் :

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் ஜோடி களம் இறங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்தனர். அதன்பின் ரவி பிஷ்னோய் மேத்யூ ஷார்ட்டை வெளியேற்றினார். அவர் 13 ரன்களில் போல்ட் ஆனார்.. பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஷ் இடையே சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்தது. இருவரும் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டனர். ஸ்டீவ் ஸ்மித் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஸ்மித் பெவிலியன் திரும்பினார். மறுபுறம், ஜோஸ் இங்கிலீஸ் அதிரடியாக 47 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 50 பந்தில் 110 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்தார். அதன்பின், ஸ்டோய்னிஸ் 7 ரன்னுடனும், டிம் டேவிட் 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.