ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரின் சதத்தால் இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 12 வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் பொறுமையாக இன்னிங்க்ஸை தொடங்கி பின் அதிரடி காட்டினர். இருவருமே டி20 போல அதிரடியாக ஆட பவுலர்களால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருவருமே அரைசதம் கடந்து வெளுத்து வாங்கினர்.. 24.1 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை கடந்தது. அதன் பிறகு ரோஹித் சர்மா டிக்னர் வீசிய 26 ஓவரில் சதம் விளாசினார். இது ரோகித் சர்மாவுக்கு 30 ஆவது ஒருநாள் சதமாகும்.

அதுமட்டுமின்றி ரோகித் சர்மா 1,100 நாட்களுக்கு பின் சதம் விளாசி உள்ளார். அதன் பின் கில்லும் சதம் விலாசினார். கில்லுக்கு இது 4வது ஒருநாள் சதமாகும்.  இதையடுத்து பிரேஸ்வெல் வீசிய 27ஆவது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் டிக்னர் வீசிய 28 வது ஓவரில் கில் இருவரும் அவுட் ஆகினர். ரோஹித் சர்மா 85 பந்துகளில் (9 பவுண்டரி, 6 சிக்ஸர்) 101 ரன்களும், கில் 78 பந்துகளில் (13 பவுண்டரி, 5 சிக்ஸர்) 112 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து விராட் கோலி – இஷான் கிஷன் ஜோடி சேர்த்து சிறிது நேரம் ஆடிய நிலையில், இஷான் கிஷன்  17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து விராட் கோலி அவர் பங்கிற்கு 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சூர்ய குமார் யாதவும் 14 ரன்கள்எடுத்து விக்கெட்டை விட்டார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா- வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்த நிலையில், சுந்தர் 9 ரன்னில் அவுட் ஆனார்..

பின்னர் ஷர்துல் தாகூர்- பாண்டியா ஜோடி கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடியது.. தாகூர் 25 ரன்கள் சேர்த்து 48வது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.. தொடர்ந்து அரைசதம் விளாசிய ஹர்திக் பாண்டியா 54 ரன்கள் எடுத்த நிலையில், 49 வது ஓவரில் அவுட் ஆனார்.. இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் (3) கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். உம்ரன் மாலிக் (2) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.. இந்திய அணி அதிரடி துவக்கம் கொடுத்த போதிலும், இடையில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் 400 ரன்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி மற்றும் டிக்னர் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.