3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதற்கான இறுதி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று (பிப்.1 புதன்கிழமை) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி துவக்க வீரராக களம் இறங்கிய  இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.. இதையடுத்து சுப்மன் கில்லுடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. இதில் ராகுல் திரிபாதி விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக 22 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) 44 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுபுறம் சுப்மன் கில்லும் அரைசதம் கடந்து விளாசினார்.. இதைடுத்து கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.. சூர்யகுமார் யாதவ் தன் பங்குக்கு 13 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்..

தொடர்ந்து  ஹர்திக் பாண்டியாவும், கில்லும் கைகோர்த்து கடைசியாக அதிரடி காட்டினர். மறுபுறம் சுப்மன் கில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார்.. மேலும் அதிரடியாக விளையாடிய பாண்டியா 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 63 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 126 ரன்களுடனும், தீபக் ஹூடா 2 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான பின் ஆலன் (3) மற்றும் டெவான் கான்வே (1) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஓவர்களில் அவுட் ஆனார்கள். தொடர்ந்து வந்த மார்க் சாப்மேன் டக் அவுட், கிளென் பிலிப்ஸ் (2) என வரிசையாக தொடர்ந்து விக்கெட் இழக்க நியூசிலாந்து அணி 2.4 ஓவருக்குள்ளேயே 7 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. பின்வந்த பிரேஸ்வெல் 8 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் சான்ட்னர் இருவரும் ஜோடி சேர்ந்து சற்று அணியை தாங்கி பிடித்தனர். ஆனால் இது நீடிக்கவில்லை..

பின் சான்ட்னர் (13),  இஷ் சோதி (0),  லாக்கி பெர்குசன் (0), டிக்னர் 1 என வரிசையாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். கடைசி விக்கெட்டாக மிட்செல் (35 ரன்கள்) 13-வது ஓவரில் அவுட் ஆனார்.. நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.. டேரில் மிட்செலை தவிர அதிகபட்ச ரன்கள் யாரும் எடுக்கவில்லை.. இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை அள்ளினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் இந்திய அணி தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது..