மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் தனது மகன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில், முதுமையில் தன்னை கவனிக்காத மகனிடம் உள்ள தனது சொத்துக்களை திரும்ப பெறக்கோரியும், மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு கொடுத்துள்ளார்.  இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி, பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் என்பதற்காக தான பத்திரிகையை ரத்து செய்ய முடியாது. தன்னை கவனிக்க வேண்டும் என்றும் பத்திரத்தில் வழக்கு தொடர்ந்தவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த வயது முதிர்ந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்ந்த விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, முதியோர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். சொத்துக்களை வாங்கிய பின் பெற்றோர்களை குழந்தைகள் கவனிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

இதன்படி 2007 சட்டப்பிரிவு 23 இன் படி பெற்றோர்கள் தனது பிள்ளைகள் தங்களை கவனிக்க விட்டால் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணங்களை ரத்து செய்யலாம். சொத்தின் உரிமையாளருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படும் பொழுது உதவுவது போன்ற தேவைகளை பிள்ளைகள் செய்ய தவறினால் சொத்துக்களை எழுதிக் கொடுத்த தான பத்திரம் செல்லுபடி ஆகாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.