மும்பை மற்றும் நவி மும்பை போன்ற நகரங்களில் வீடு வாடகை மற்றும் சொத்து விலை குறித்த பிரச்சனை தொடர்ந்து காணப்படுகிறது. இதனைக் சமாளிக்க நவி மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர் வித்தியாசமான யோசனையை முன்னிறுத்தியுள்ளார். பணக்காரர்களின் காலியாக உள்ள வீடுகளில் தானாகவே வாடகையில்லாமல் தங்கி, அந்த வீடுகளை பராமரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் தனது யோசனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “உங்கள் வீடு ஆளின்றி அழிகிறதா? அதை உயிருடன் வைத்திருக்க நான் தயாராக இருக்கிறேன்” என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ளார். அதன்படி, தன்னை ஒரு “அமைதியான, சுத்தமான, வேலைப்பளு அதிகமான டெவலப்பர்” என்று கூறிய அவர், மின்சாரம், நீர் கட்டணங்களை தானே செலுத்துவதாகவும், அந்த வீட்டில் எந்தவொரு கூட்டமோ, மது, புகைபிடிப்பு போன்ற செயல்களும் இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், யாருக்கும் சந்தேகப்படாமல் இருக்க, “என்னை உங்கள் உறவினராகக் கூறிக்கொள்ளலாம்” எனக் கூறி, ஒப்பந்தமே இல்லாமல் தங்குவது குறித்த தனது நோக்கத்தை தெரிவித்துள்ளார். மேலும் வாஸ்து குறைகள் உள்ள வீடுகளுக்கு “வாஸ்து ரீபூட் சேவையும்” வழங்குவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்த யோசனைக்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்த யோசனை  நடைமுறைப்படுத்த இயலுமா என்பது குறித்து சந்தேகங்களும் எழுந்துள்ளன. “பணக்காரர்கள் தங்கள் வீடுகள் காலியாக இருந்தாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள். ஒப்பந்தம் இல்லாமல் யாரும் அனுமதி தரமாட்டார்கள்” என சிலர் கூறியிருக்கிறார்கள். இருப்பினும், சிலர் இந்த யோசனையை “ஜீனியஸ் ஜுகாட்” என புகழ்ந்து வருகின்றனர்.