ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அற்புதமாக செயல்பட்டார். அவர் தனது அபார பந்துவீச்சால் இலங்கையின் டாப் ஆர்டர் பேட்டிங்கை காலி செய்தார். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இறுதிப் போட்டியில் 7 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் பலன் இப்போது கிடைத்துள்ளது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் முக்கியப் பங்காற்றிய முகமது சிராஜ், தனது அசத்தல் பந்துவீச்சால் ஒட்டுமொத்த அணியையும் 50 ரன்களுக்குள் கட்டுபடுத்தினார். ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசையில் அவர் முதலிடத்தை எட்டியுள்ளார். குல்தீப் யாதவும் முதல் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஆனால், தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள்ளார்.

ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் போட்டி தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த தரவரிசையில், அவர் 643 ரேட்டிங்கை கொண்டிருந்தார் மற்றும் 9வது இடத்தைப் பிடித்தார். ஆனால் தற்போது அவரது ரேட்டிங் 694ஐ எட்டியுள்ளதால் ஜோஷ் ஹேசில்வுட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 8 இடங்கள் முன்னேறியுள்ளார்.

முன்னதாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஜோஷ் ஹேசில்வுட் தற்போது 2வது இடத்திற்கு வந்துள்ளார். அவரது ரேட்டிங் இப்போது 678. நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட்டும்  677 ரேட்டிங்குடன் 3வது இடத்திற்குசென்றார். முஜீப் உர் ரஹ்மான் 657 ரேட்டிங்குடன் இன்னும் 4வது இடத்தில் இருக்கிறார். ரஷித் கான் 655 ரேட்டிங்குடன் 5வது இடத்தில் உள்ளார். மிட்செல் ஸ்டார்க் 652 ரேட்டிங்குடன் நேராக 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் மாட் ஹென்றி 645 ரேட்டிங்கில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே நேரத்தில் ஆடம் ஜாம்பா 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மறுபுறம், குல்தீப் யாதவ் ஆசிய கோப்பையில் தொடரின் நாயகன் விருதை வென்றார். முந்தைய தரவரிசையில் 656 ரேட்டிங்குடன்7வது இடத்தில் இருந்த குல்தீப் யாதவ் தற்போது 638 ரேட்டிங் குறைந்து 9வது இடத்திற்கு சென்றுள்ளார். ஷாஹீன் ஷா அப்ரிடி 632 ரேட்டிங்குடன் 10வது இடத்தில் உள்ளார்.