குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு கணவர், தன் மனைவி மீது கொடூரமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் மிகவும் வினோதமானவை.
அதாவது, மனைவி தெரு நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றை கணவரையே பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும், அவமானப்படுத்தும் நோக்கத்துடன் போலியான தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அலுவலகத்தில் இவரைச் சங்கடப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்ப நல நீதிமன்றம் இவரது விவாகரத்து மனுவை நிராகரித்ததால், இந்த வழக்கு தற்போது குஜராத் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
2006ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், நாய்கள் வளர்க்கத் தடை செய்யப்பட்டிருந்த குடியிருப்பில் மனைவி தெரு நாய்களை வீட்டுக்குள் கொண்டு வந்ததில் இருந்தே பிரச்சனை தொடங்கியதாகக் கணவர் தெரிவித்துள்ளார்.
அவர் நாய்களுக்கு உணவு சமைக்கச் சொல்லியும், சுத்தம் செய்யச் சொல்லியும் மனைவி கட்டாயப்படுத்தியதாகக் கூறியுள்ளார். நாய்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகத் தனக்கு உடல் ரீதியான திறன்கள் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அலுவலகத்தில் அவமானப்படுத்த, தன் மனைவி ரேடியோ ஜாக்கியை வைத்துத் தனக்கு ஒரு கேலி அழைப்பை வரவழைத்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருமண உறவு முழுமையாக முறிந்துவிட்டதால், கணவர் ₹15 லட்சம் ஜீவனாம்சம் தர முன்வந்தபோது, மனைவி ₹2 கோடி கேட்டுள்ளதால், உயர் நீதிமன்றம் அடுத்த விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
