
சென்னை மாவட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம் பகுதியில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நேர அகற்று வாரியம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். ரூபாய் 44.15 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். பின்னர் வளர்ச்சிக்கான திட்ட பணிகள் நடைபெறுவதை கள ஆய்வு செய்தார். அதன் பின் முதல்வரை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு ஆட்டோகிராப் செய்தும், அவர்களுடன் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற சட்டப்பேரவையில் ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிப்போம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக தான் செயல்படுகிறது. அதனால் தான் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலரும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு முன் வருகின்றனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதை மட்டும் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பூதாகரத்தை கிளப்பி வருகின்றனர். தந்தை பெரியார் எங்கள் தலைவர்களுக்கெல்லாம் மூத்த தலைவர் அவரைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் குறித்து நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அவர்களுக்கு மரியாதை கொடுக்கவும் தயாராக இல்லை. கவர்னர் அரசின் எல்லாவற்றிற்கும் எதிராகத்தான் எப்பொழுதும் செயல்படுகிறார். அதனை தொடர்ந்து அவர் செய்ய வேண்டும். அது எங்களுக்கு நல்லதாகவே அமைகிறது அது ஆட்சியின் சிறப்பை கூடுதல் ஆக்குகிறது. எனவும் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.