ஆன்மிக செயல்களில் அதிக ஈடுபாடு காட்டி, குடும்ப வாழ்க்கையையும் உடலுறவு வாழ்க்கையையும் புறக்கணித்த கணவருக்கு எதிராக, அவரது மனைவி வழக்குத் தொடுத்த வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் விவாகரத்து தீர்ப்பை உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. ஸ்நேஹலதா அடங்கிய அமர்வில், “திருமண வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவரின் நம்பிக்கைகளை கட்டாயப்படுத்த முடியாது.

அதுவே ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும், அதை பிறருக்கு திணிப்பது ஒரு மன வேதனைக்குரிய செயல்” எனக் கூறி, விவாகரத்து வழங்கப்பட்டது. கடந்த 2016-ல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், சில ஆண்டுகளில் கணவர் வேலை முடிந்ததும் குருக்கள், ஆசிரமங்கள், கோவில்கள் என ஆன்மிக செயல்களில் மட்டுமே ஈடுபட்டு, குழந்தை பெறுவதிலும், உடலுறவில் ஈடுபடுவதிலும் ஆர்வமின்றி இருந்ததாக மனைவி கூறினார்.

மேலும், தனது முதுநிலைப் படிப்பைத் தொடர அனுமதிக்காமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். 2019-ல் விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்த மனைவி, பின்னர் கணவர் மாறுவேன் என வாக்குறுதி அளித்ததால் மனுவை வாபஸ் பெற்றிருந்தார். ஆனால் அதன்பிறகும் மனநிலையிலும் பழக்கவழக்கத்திலும் மாற்றம் ஏதும் இல்லாததால் 2022-ல் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

வழக்கில் கணவர் தனது ஆன்மிக செயல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், திருமணக் கடமைகளை புறக்கணிக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம், “முன்னாள் மனைவியின் வாதத்தில் சந்தேகிக்க எதுவும் இல்லை. பரஸ்பர நம்பிக்கை, அன்பு இழக்கப்பட்டு, இந்த திருமணம் முற்றிலுமாக உடைந்துவிட்டது” என உறுதி செய்து, குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்தது.