திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதனால் பழனிமலை கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தல் சரிந்து விழுந்தது. இதுபற்றி அறிந்த கோவில் ஆணையர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதனையடுத்து ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிழற்பந்தலை அகற்றி விட்டனர். அந்த நேரம் பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ரோப்கார் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. மாலை 7 மணிக்கு நடைபெறும் தங்கரத புறப்பாடும் நடைபெறவில்லை. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விநியோகம் சீரானது.