
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் பிரேக் கிடைத்த நடிகை ஷாலினி பாண்டே, சமீபத்தில் Netflix-இல் வெளியான ‘டப்பா கார்டெல்’ என்ற தொடரில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், தன் ஆரம்ப திரைப்பயணத்தின் போது ஒரு தென்னிந்திய இயக்குநரால் ஏற்பட்ட சம்பவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நான் ஒரு தென்னிந்திய படத்தில் வேலை செய்யும் போது, அந்த இயக்குநர் என் வேனில் நான் உடை மாற்றிக்கொண்டிருக்கும் போது, திடீரென கதவை தட்டாமல் உள்ளே வந்தார். இது என் முதல் படத்துக்குப் பிறகு நடந்த சம்பவம்” என ஷாலினி தெரிவித்தார்.
அந்த நேரத்தில், “இளமையாக இருக்கிறீர்கள், எல்லோருடன் இனிமையாக பழக வேண்டும், இல்லைனா வாய்ப்பு கிடையாது” என்ற ஆலோசனைகள் பலரிடமிருந்து வந்திருந்தாலும், அந்த கட்டத்தில் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
அப்போ “எனக்கு 22 வயசு தான். அவர் உள்ள வந்ததும், நான் சத்தமாக கூச்சிட்டேன். எனக்கு கோபம் வந்து கத்திவிட்டேன்,” என்றார் ஷாலினி. அனால் அவர் எந்த இயக்குநர் என்பதை குறிப்பிடவில்லை. ‘அர்ஜுன் ரெட்டி’யின் இயக்குநர் சந்தீப் வெங்கா அல்ல என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
“மூத்தவர்கள் சொல்வது போல எல்லா நேரத்திலேயும் சாமர்த்தியமாக நடக்க முடியாது என்று கூறினார். ‘அர்ஜுன் ரெட்டி’க்குப் பிறகு, பல தென்னிந்திய படங்கள், ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள ஷாலினி பாண்டே, தற்போது வெவ்வேறு மொழிகளில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.