
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 52 வயதான கெரி மஸ்ஸுகா என்பவர், 1997 ஆம் ஆண்டு தனக்கு பிறந்த ஆண் குழந்தையை கொன்று, உடலை அல்பானி பகுதியில் உள்ள மலர் பூங்கா ஒன்றில் எரிந்த துணியில் வைத்து வீசினார்.
அந்த உடல் “Baby Moses” என அடையாளம் தெரியாத சடலமாகக் கருதப்பட்டது. தற்போது வெளிவந்த காவல்துறையினரின் விசாரணை வீடியோவில், மஸ்ஸுகா அமைதியாக “நான் அதைச் செய்தேன்” என ஒப்புக்கொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
முதலில், குழந்தை குளியல் தொட்டியில் இறந்துவிட்டதாகவும், உடலை ஒருவரிடம் கொடுத்ததாகவும் பொய் கூறிய மஸ்ஸுகா, பின்னர் குழந்தையை தீ வைத்து எரித்ததாக நேரடியாக ஒப்புக்கொண்டார்.
பிரேத பரிசோதனையில் குழந்தையின் மரணம் இயற்கையல்ல என்பதை உறுதி செய்த புலனாய்வாளர்கள், டிஎன்ஏ சோதனையின் மூலம் குழந்தை மஸ்ஸுகாவின் குழந்தை என நிரூபித்தனர். அந்த ஆதாரங்களை மையமாகக் கொண்டு கடந்த 2024 செப்டம்பரில் அவர் கைது செய்யப்பட்டார். தன் தவறை பிப்ரவரி 2025-இல் நீதிமன்றத்தில் மஸ்ஸுகா ஒப்புக்கொண்டார்.
அல்பானி கவுண்டி நீதிபதி ரோஜர் மெக்டோனா, கெரி மஸ்ஸுகாவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். மேலும், தண்டனை முடிந்த பின்னும் 5 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தாயின் கொடூர செயல் பலரின் மனதை கலங்கவைத்துள்ளன. பழைய கொலை வழக்கு தீர்ப்புக்கு வந்திருப்பது, நீதியின் வெற்றியை நிரூபிக்கிறது.