நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற என் தாய் தமிழ் உறவுகளே…. என்னுடைய நம்பிக்கையும்,  நாளைய தமிழ் பேரினத்தின் எதிர்காலமாக இருக்கிற என் உயிர் தம்பி – தங்கைகளே…  உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும்,  வணக்கமும்..

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ? மொழி என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிர். அதுதான் முகம், முகவரி, அடையாளம், இலக்கியம், வரலாறு எல்லாம். உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ். உலகில் தோன்றிய முதல் மாந்தன் தமிழன். இதை நமது முன்னோர்கள்…  நம்முடைய தாத்தா தேவநேய பாவாணர்கள் போன்றோர்கள்,  தங்கள் ஆய்விலே நிறுவி இருந்தாலும்,  நமக்கு சற்றும் தொடர்பில்லாத பிற மொழி அறிஞர்கள் குறிப்பாக…

அமெரிக்க மொழியியல் ஆய்வு அறிஞர் அலெக்ஸ் கோலியர் உலகில் மனிதன் முதன் முதலாக பேசிய மொழி தமிழ் என்று தன்னுடைய மாணவர்களுக்கு வகுப்பெடுகிறார் .  தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்,  மற்ற இனங்கள் எல்லாம் வந்து குடியேறியவர்கள் என்று டோனி ஜோசப்பும்,  ரிச்சர்டு மார்டினும் தங்கள் ஆய்வு கட்டுரையிலே நிறுவுகிறார்கள். அமெரிக்க மொழிகள் ஆய்வு அறிஞர் சுசு மோகனோ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நிலத்திற்கு…. ஜப்பானுக்கு….  வேளாண்மை எப்படி செய்வதென்று ?

கற்றுக் கொடுக்க தமிழர்கள் வந்தார்கள். அவர்கள் மொழியில் இருந்த கலைச்சொற்கள், உயிர்ச் சொற்கள், வேர்ச் சொற்களை எடுத்து எங்கள் தாய் மொழியை நாங்கள் உருவாக்கிக் கொண்டோம், செழுமைப்படுத்திக் கொண்டோம்… இந்திய பெரு நாட்டின் அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்த புரட்சியாளர் அறிவாசனல் அண்ணன் அம்பேத்கர் அவர்கள்,  இந்திய நிலப்பரப்பு முழுதும் தமிழை தாய் மொழியாக கொண்ட நாகர்கள் தான் பரவி வாழ்ந்தார்கள்.

இந்த நாடே என் நாடு என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ள ஒரே ஒரு இனத்திற்கு தான் இந்திய நிலப்பரப்பில் உரிமை உண்டு. அது தமிழர்களுக்கு மட்டும்தான் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதிவு செய்கிறார். எங்கள் மொழி தமிழ். எங்கள் முகமாக.. முகவரியாக… அடையாளமாக.. அனைத்துமாக  இருக்கிற எங்கள் மொழி தமிழ்… இருந்த மொழி தமிழ்…. இருந்த என்றால் ? இப்போது இல்லை என்று பொருள்.

எல்லா மொழிகளும் உலகத்தில் மனிதர்களால் பேசப்பட்டது,  பேசப்படுகிறது. ஆனால் என் தாய்மொழி தமிழ் தான் இறைவனால் பேசப்பட்டது,  தெய்வத்தின் மொழி.  மணி நெற்றி உமிழ் சங்கன் தழல் உரை சுடர் கடவுள் தந்த தமிழ் என்று பாடுது….  சிவபெருமானே தந்த மொழியடா என்று சொல்லுது. என் தாய்மொழி வழிபாட்டில் வெளியேற்றப்பட்டு,  சிவனுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் வழிபாடு…. நமச்சிவாய வாழ்க…. நாதன் தாள் வாழ்க… இமைப்பொழுது என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று திருவாசகம் பாட வேண்டிய இடத்தில்,  ஏதோ ஒரு மொழியில் நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.