பீகார் மாநில அரசு பொருளாதார ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் கங்கை நீரின் தரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பீஹார் மாநிலத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததில் 34 இடங்களில் கங்கை நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கங்கை நதியில் “கோலிபாம்” என்ற நுண்ணுயிர் பாக்டீரியா கிருமிகள் அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் கங்கை நதியில் குளிப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, கங்கை மற்றும் அதன் துணை நதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடையும் கங்கை நீரில் கலப்பதால் இந்த வகையான நுண்ணுயிரிகள் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கங்கை நீரில் இதர அளவீடுகள் சரியான முறையில் உள்ளன. நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றிற்கு உகந்ததாக உள்ளது. நீர் பாசனத்திற்கும் ஏற்ற வகையில் உள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை குறித்து பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டி.கே. சுக்லா கங்கை நதியில் அதிக அளவு நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என தெரிவித்துள்ளார்.