அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பிரதமர் மோடி சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும்,  அமெரிக்காவும் பல்வேறு சூழல்களில் நட்புறவை பேணி வரும் நிலையில் அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு அந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சந்திப்பின்போது இந்தியா – அமெரிக்கா இடையே சிறு அணு உலைகள் அமைப்பு தொடர்பான அணுசக்தி ஒப்பந்தம்,  ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மற்றும் ட்ரான்கள் தொடர்பான ஒப்பந்தம், ஜெட் என்ஜின்களுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து இந்தியாவில் 6 சிறிய ரக அணு உலைகள் அமைக்கப்படுவதுடன் அதற்கான தொழில் நுட்ப பகிர்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவில் தற்போது ரஷ்ய ஒத்துழைப்புடன் கூடிய அணு உலைகளே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் சக்தி வாய்ந்த ட்ரான்களை வாங்குவதற்கான திட்டங்களை  இந்தியா முன்வைத்த நிலையில்,  பல்வேறு கட்ட விவாதங்கள் இரு நாடுகளுக்கு இடையே நடந்து வந்தன.

தற்போது அமெரிக்க அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பின் போது இது ஒப்பந்தமாக மாறும் என நம்பப்படுகிறது. இந்திய மாணவர்கள் பலம் பெறும் வகையில் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற முதுகலை படிப்புகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வகையில் விசா மாற்றம் கொண்டு வருவதற்கான திட்டமும் விவாதிக்கப்பட உள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூடுதலான உதவிகளை வழங்குவதற்கான இரு நாட்டு நலுற ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று சொல்லப்படுகிறது. பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்காவில் சியாட்டில் நகரில் இந்திய துணை தூதரகம் ஆகியவற்றை தொடங்குவதுடன்,  மேலும் 2 துணை தூதரங்களை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேசி வருகின்றனர்.