சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி தனது மனைவி மைதிலியுடன் 9 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். 2021 நவம்பர் மாதம் முதல் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளமியா (24) என்பவர் இங்கு கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மைதிலி, மருத்துவமனையின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்தார்.

அதில், செளமியா நோயாளிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு புத்தகத்தில் பதிவு செய்யாமல் கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும், மருத்துவமனை ஜி-பே வேலை செய்யவில்லை என கூறி ஜி-பே பணமாற்றத்தை தன் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றியிருந்தார். இதன் மூலம் 2022 பிப்ரவரி மாதம் முதல் 2024 மே மாதம் வரை ரூ. 52.24 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. இதுதொடர்பாக மைதிலி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செளமியாவை கைது செய்தனர்.