கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி வழியாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். எனவே தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்தவர்கள் மாலை 6 மணிக்கு முன்பாக சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, இரவு நேரம் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்து காட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மலை பாதையில் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உள்ளூர் மக்கள் அவசர தேவைக்கு வால்பாறைக்கு செல்லலாம். மேலும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் வழக்கம் போல செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.