திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்குளத்தைச் சேர்ந்த தனிஷ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் சன்னி என்பது தெரியவந்தது.

இந்நிலையில் தனிஷ் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, எர்ணாகுளத்தைச் சேர்ந்த அர்சத் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் பாம்பை வாங்குவதற்காக களக்காட்டுக்கு வந்து பத்து லட்ச ரூபாய் வரை பேரம் பேசியுள்ளனர். சுமார் 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை முத்துசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளனர். அந்த பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தனிஷ், சன்னி, அர்சத், முத்துசாமி, தென்காசியை சேர்ந்த முருகேசன், ஐயப்பன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.