இன்றைய காலகட்டத்தில் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். செல்போனில் யுபிஎஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதால் தற்போது பலரும் பாக்கெட்டுகளில் பணத்தை எடுத்துச் செல்வது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலின் மூலம் பணத்தை செலுத்தலாம் என்பதால் பலரும் அதைத்தான் விரும்புகிறார்கள். இந்த யுபிஐ செயலி நன்மைகள் கொடுத்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது. அதாவது உங்களிடம் மோசடி கும்பல் பல்வேறு விதமான ஆசை வார்த்தைகளை கூறி யுபிஐ செயலி மூலமாக பணம் அனுப்புமாறு கூறுவார்கள்.

நீங்கள் அப்படி பணத்தை அனுப்பும் போது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொண்டு உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். எனவே முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளையோ லிங்கையோ தொடாமல் இருப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு தெரியாத நபரிடம் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தால் உங்கள் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அந்த அழைப்பை துண்டிக்கலாம் அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். பொதுவாக யுபிஐ செயலியில் 6 இலக்க எண் அல்லது 4 இலக்க எண் கொண்ட பாஸ்வேர்டை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.

இதில் 6 இலக்க பாஸ்வேர்டு பெரும்பாலானோர் திருமண நாள், பிறந்தநாள் போன்ற நாட்களை குறித்து வைப்பதால் இதை மோசடி கும்பல் எளிதாக கண்டுபிடித்து விடும். எனவே முடிந்தவரை 4 இலக்க பாஸ்வேர்டை பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் கியூ ஆர் கோடு ஸ்கேன் மூலம் பணத்தை அனுப்பும் போது ஒரு முறைக்கு இருமுறை கடைக்காரரிடம் கேட்டு தகவல்களை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே ரகசிய எண் பயன்படுத்தப் படுகிறது. பணத்தை வாங்குவதற்கு ரகசிய எண் தேவைப்படாது. மேலும் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பான செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.