
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அவ்வப்போது கோவிலுக்கு மேலே ராணுவ பயிற்சி விமானங்கள் ஹெலிகாப்டர்கள் பறந்து செல்வதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த விமானத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்படவில்லை காற்றைப் பொறுத்து விமானங்களின் பாதை மாற்றப்படும் எனக் கூறியதோடு ரேணிகுண்டாவில் அமைந்துள்ள மத்திய விமான நிறுவனத்திடம் முறையிட்டால் பரிசீலினை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு கடப்பாவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டதன் காரணமாக பெங்களூரில் இருந்து வரவேண்டிய விமானங்கள் ரேணிகுண்டா வந்து அங்கிருந்து கடப்பா செல்லும் சமயத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மேலே பறக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் கோயிலின் விமானங்கள் பறந்து செல்வதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு மேலே விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்திற்கு எதிரானது என தங்கள் கவலையை பக்தர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.