வெனிசுலா நாட்டில் புதன்கிழமை அன்று இரவு 10:04 மணியளவில், வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் அந்நாட்டையே ஒட்டுமொத்தமாக உலுக்கியுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் ( தகவல்படி, முதல் நிலநடுக்கம் சான் பெலிப் நகருக்கு அருகே ரிக்டர் அளவில் 7.2 தீவிரத்துடன் பதிவானது. இந்த முதல் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள்ளாகவே, அடுத்த 39 விநாடிகளில் யுமாரே நகருக்கு அருகே ரிக்டர் அளவில் 7.5 ஆக இரண்டாவது நிலநடுக்கம் மிகக் கொடூரமாகத் தாக்கியது.
ஒன்றுக்கொன்று 45 கிலோமீட்டர் தூர இடைவெளியில் வெவ்வேறு ஆழங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களின் தாக்கம், அண்டை நாடான கொலம்பியாவிலும் கடுமையாக உணரப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் தலைநகர் காரகாஸ் உட்பட பல நகரங்களில் உள்ள பிரதான சாலைகள் நடுவே இரண்டாகப் பிளந்துள்ளன; பல அடுக்குமாடி கட்டடங்கள் பெரும் விரிசல்களுடன் சரிந்ததோடு, ஏராளமான வீடுகள் சீட்டுக்கட்டுகளைப் போலத் தரைமட்டமாகின.
🇻🇪 ❗️| Momento del terremoto en el Aeropuerto internacional de Maiquetía pic.twitter.com/jsq2giE1u4
— Alerta News 🚨 (@Alerta_News_) June 24, 2026
இந்த நிலநடுக்கத்தின் கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. விமான நிலையத்தில் பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடுவதும், தலைநகர் காரகாஸில் உள்ள ஒரு வானளாவிய கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்த நீச்சல் குளத்துத் தண்ணீர், நிலநடுக்கத்தின் வேகத்தால் நிலத்தில் நீர்வீழ்ச்சியைப் போலக் கொட்டுவதும் வீடியோக்களில் பதிவாகியுள்ளன. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரக்கால மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வெனிசுலாவின் உள்விவகாரத் துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ அரசுத் தொலைக்காட்சியில் பேசுகையில், தலைநகரில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சேத விபரங்கள் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருவதாகவும் கூறினார். 1967-ஆம் ஆண்டு நடந்த விநாசகாரி நிலநடுக்கத்தை விட இது அதிக கொடூரமானது என 80 வயது முதியவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களுக்கு நில அதிர்வுகள் தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்ததாகவும் 700க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Scary scenes coming out of Venezuela following a powerful earthquake. pic.twitter.com/wxFHulLNkC
— Breaking911 (@Breaking911) June 24, 2026
