தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கேசவ விநாயகத்திற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் ‘சத்பாவ்’ (சமுதாய நல்லெண்ணம்) எனும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென்பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது வழக்கமான நடைமுறைதான். அந்த அடிப்படையில், கேசவ விநாயகன் இனி தமிழகம் முழுவதும் ‘சத்பாவ்’ பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழகத்தின் ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கேசவ விநாயகன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருத்துகளையும் வழிகாட்டல்களையும் கட்சிக்குள் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், கட்சியின் அதிகார மையமாகவும் கடந்த 9 ஆண்டுகளாக அவர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் ஆலோசனைகள் மற்றும் சில புகார்களின் அடிப்படையில் இந்தப் பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தவும் புதிய உத்திகளை வகுக்கவும் இந்த அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
