நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டு கதவுமீது போலீசார் சம்மன் ஒட்டி சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த சம்மன் கிழிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை தாக்கியதாக கூறி வீட்டு காவலரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்மனை கிழித்த பணியாளரும் கைது செய்யப்பட்டார்.

சம்மனை கிழித்து, காவல்துறையினரை தாக்க முயற்சித்ததாக இருவர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டு பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சீமான் வீட்டு பாதுகாவலர் பணியாளரின் ஜாமீன் மனுக்கள் மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என காவல்துறை கோரிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்