19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் அணியும், யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டிக்கான டடாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர் சமீர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடித்து 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் தேவையான ஆதரவை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வைபவ் மற்றும் கேப்டன் மாத்ரே விளையாடினர். ஆனால், மாத்ரே 2 ரன்னிலும், வைபவ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஜார்ஜ் 16 ரன்னில் வெளியேறினார்.

இதன் பின்னர் வந்த இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்திலும் இந்திய அணியால் போட்டியில் திரும்ப முடியவில்லை.

இறுதியில், இந்திய அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, இளையோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக  கைப்பற்றியது.