கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளக்காபாளையம் செல்லும் சாலையோரம் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது சுற்றுசுவரை பிடித்துக் கொண்டு ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி அவரை மீட்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் வெளிச்சம் இல்லாமல் அந்த நபரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர் மகேந்திரன் சக வீரர்களின் உதவியுடன் கயிரைப் பிடித்து கொண்டு கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தொழிலாளியான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. குடிபோதையில் ஜெயகுமார் கிணற்றுக்கு அருகே நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் கிணற்றுக்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக ஜெயக்குமார் உள்ளே குதித்து தண்ணீரில் தத்தளித்தது தெரியவந்தது. அவருக்கு தீயணைப்பு வீரர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.