சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆவடி கவரப்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வு எடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் ஆவடியில் இருக்கும் விற்பனை நிலையத்திற்கு லாரியை ஓட்டி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பியில் கண்டெய்னர் உரசியது.

இதனால் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதாம் உசேன் உடனடியாக கீழே இறங்கி தூரமாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் தீ அனைத்து மோட்டார் சைக்கிள்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைவித்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த 40 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.