ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி மனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற யானை பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கருப்பன் யானை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி யானையை பிடிப்பதற்காக மருத்துவ குழுவினர் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். ஆனாலும் மயங்காத கருப்பன் வனப்பகுதிக்கு தப்பி சென்றதால் வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் கலீம் யானையை வனத்துறையினர் பொள்ளாச்சி டாப் சிலிப்புக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றி உள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் கருப்பன் யானை பிடிக்கும் வரை கும்கி யானைகளை கொண்டு செல்லக்கூடாது என லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி வனத்துறையினர் கூறும் போது, யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பாகன்கள் இல்லாமல் கும்கி யானையை இங்கு வைத்திருக்க முடியாது. மேலும் மயக்க ஊசியும் வராததால், பயிற்சி முடிந்து வருகிற பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி அல்லது 9-ஆம் தேதி கும்கி யானைகளை வரவழைத்து கருப்பனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் லாரியை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.