கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி அணைப்பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் ஒருவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று ஆறுமுகம் அறுவடை செய்த வெண்டைக்காய்களை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை துணை மின் நிலையம் எதிரே ஆறுமுகம் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே சமயம் சின்னசேலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்துவிட்டு அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இனிவரும் காலங்களில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்கள் அந்த இடத்தில் தடுப்பு கட்டைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கவும் சாலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.