கர்நாடகா மாநிலத்தில் சோப்பு மற்றும் டிடர்ஜன் நிறுவனம் மைசூர் சாண்டல் என்ற பெயரில் பல்வேறு வகையான சோப்புகளை தயார் செய்து வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம் பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு அவருக்கு ரூ. 6.20 கோடி சம்பளம் வழங்க நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு கர்நாடகாவை சேர்ந்த ஒரு நடிகையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் அறிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கன்னட தொழில் துறை அமைச்சர் கூறியதாவது, மைசூர் சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 5 கோடி ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். பிரபல நடிகை தமன்னாவை நியமிப்பதற்கு முன்பதாக நாங்கள் நடிகை தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை சந்தித்து பேசினோம்.
மேலும் அதோடு நடிகைகள் பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரிடமும் பேசினோம். அவர்கள் அனைவரும் மற்ற பணிகளில் தீவிரமாக உள்ளனர். அதனால் சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின் தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் நியமிக்க முடிவு செய்தோம் என்று கூறினார்.
இந்நிலையில் இந்த நிறுவனம் கடந்த மே மாதம் வரலாறு காணாத விற்பனையை எட்டி உள்ளது. நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்த பிராண்ட் ரூ. 186 கோடி விற்பனை செய்து ஒரே மாதத்தில் மிக உயர்ந்த விற்பனை சாதனையை பெற்றுள்ளது.