
கேரளா கொய்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (53). இவர் 14 வயதில் 2 கொலைகளை செய்துள்ளதாக தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1986 ஆம் ஆண்டு முகமது அலி வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு வாலிபர் அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் திடீரென அந்த வாலிபரை அடித்து கால்வாயில் தள்ளிவிட்டார்.
இதை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின்பு அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் யாரும் புகார் அளிக்காததால் காவல்துறையினர் அதனை வழக்குப்பதிவு செய்யாமல் முடித்து விட்டனர். இதே போன்று 1989 ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரை பகுதியில் முகமது அலி மற்றொரு நபரை கொன்றதாகவும் கூறினார்.
தற்போது முகமது அலிக்கு 53 வயது ஆகும் நிலையில் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்துள்ளது. சமீபத்தில் அவரது மூத்த மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதே விபத்தில் அவருடைய இளைய மகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது அனைத்தும் தான் கடந்த காலத்தில் செய்த குற்றத்திற்கான தண்டனை தான் என்று மனவேதனையடைந்த முகமது அலி காவல் நிலையத்திற்கு சென்று தான் சிறு வயதில் செய்த கொலைகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கூறிய 2 கொலைகள் தொடர்பான பழைய கோப்புகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வரும் நிலையில் தான் செய்த கொலையை 40 வருடங்களுக்கு பின் ஒப்புக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.