2500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதவாதத்திற்கு எதிரியே தவிர, மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல. எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரி,  மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி தான் இன்றைக்கு திராவிடம் மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கக்கூடிய பகுதிகளில் இருக்கக்கூடிய திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 2500 திருக்கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதைத்தான் நம்முடைய அரசு விரும்புகிறது. இதுதான் நம்முடைய அரசினுடைய நோக்கம்.

திருவாரூரில் பல்லாண்டு காலமாக ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்த பெருமை யாருக்கு என்று கேட்டால் ? நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்குத்தான். அப்போது அவர் சொன்னார் தேர் வரக்கூடிய பாதையை சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. தேரோடுவது சில நாட்கள் தான், ஆனால் மக்கள் 365 நாளும் தொடர்ந்து அந்த சாலையை  பயன்படுத்துகிறார்கள் அப்படி என்று தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு குறிப்பிட்டு சொன்னார்கள். ஆக கோயில்கள் எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.