சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த மாடுகளை 2 நாட்களுக்கு பராமரிக்கும் செலவோடு சேர்ந்து மாட்டின் உரிமையாளருக்கு 2000 அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை 2 நாட்கள் ஆகியும் உரிமையாளர்கள் வரவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் மாட்டை பராமரிப்பதற்கு ரூபாய் 200 அபராதமாக விதிக்கப்படும். அதன் பிறகு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 446 மாடுகள் பிடிபட்ட நிலையில், உரிமையாளர்களுக்கு 8 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சியிடம் பிடிபட்ட மாடுகளை விடுவிக்க மாட்டின் உரிமையாளர்கள் மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மாடு வளர்ப்பவரின் வீடுகள் அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையப்பத்தை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டும் தான் பிடிபட்ட மாடுகள் விடுவிக்கப்படும். ஒரு‌ மாடு‌ 3-வது முறையாக பிடிபடும்போது மாட்டின் உரிமையாளருக்கு மீண்டும் மாடு ஒப்படைக்கப்படாது. அதற்கு பதில் மாடு ப்ளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்தரும் மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.