மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, கூட்டணி தொடர்பாக கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து இறுதி செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை உறுதி செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டுள்ளனர்.

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் :

அதன்படி திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி தொகுதி பங்கிட்டை நிறைவு செய்துள்ளது திமுக.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் :

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், பெரம்பலூர்,
தூத்துக்குடி, தஞ்சாவூர், தென்காசி, தேனி, ஆரணி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதி :

அதேபோல மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துறை வைகோ அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிடுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் ஒரு தொகுதி :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதி :

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மற்றும் திருப்பூரில் போட்டியிடுகிறது.

விசிக போட்டியிடும் 2 தொகுதி :

விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கொமதேக ஒரு தொகுதியில் போட்டி :

நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதி :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரையில் சு வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டியிடுகின்றனர்