முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அதாவது ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 29.3% ஆக உள்ளது. இது கடந்த காலங்களை விட உயர்வாகும். முதியோர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இத்தாலி, போர்ச்சுகல், கிரீஸ், பின்லாந்து, ஜெர்மனி மற்றும் குரேஷி ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஜப்பானில் பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாததால் மக்கள் தொகை குறைந்து வருகிறது.

இதனை மாற்றுவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள முதியவர்கள் தாங்கள் நல்ல முறையில் வாழ்வதற்கு பல குற்றங்களை செய்துவிட்டு சிறையில் வாழ்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானின் மிகப்பெரிய சிறையாக கருதப்படுவது டோச்சிகி சிறை இங்கு கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர். இதில் வயதானவர்களே அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறையில் உள்ள பெண் கைதிகளிடம் கேட்டபோது சிலர், பொருளாதார ரீதியாகவும், நல்ல நிலைமையிலும் வாழ முடியவில்லை எனவும், பிள்ளைகளால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதால் உணவு, உடல் நலம் குறித்த அடிப்படை தேவைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் இதன் காரணமாகவே வெளியே ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டு சிறைக்கு வந்து விடுவதாக கூறியுள்ளனர். மேலும் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் தவறு செய்து விட்டு சிறைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஏனெனில் சிறையில் அனைத்து உதவிகளும் நன்றாக கிடைக்கப் பெறுவதாகவும், வயதான காலத்தில் தங்களை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.