ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, இவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், கோபண்ணா உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.