
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் இன்டேன் எனும் பெயரில் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு 14.2 கிலோ எடை சிலிண்டரும், வர்த்தக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது அதிகம் புழக்கத்திலுள்ள சிலிண்டர்கள் அதிக எடையுடனும் விரைவில் துருபிடிக்கும் வகையிலும் இருக்கிறது. இதற்கு தீர்வுகாணும் வகையில் புது காம்போசிட் சிலிண்டரை 2021-ல் இந்தியன் ஆயில் அறிமுகம் செய்தது.
இந்த புது வகை சிலிண்டரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பாதுகாப்பு தன்மையை உறுதிசெய்யும் வகையில் இந்த சிலிண்டர் பாலிமர் பைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்கால் ஆன அவுட்டர் ஜாக்கெட் வாயிலாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புடன் இதனுடைய எடையும் குறைவாக இருப்பதால் பெண்கள் இதை கையாள்வது மிகவும் எளிது. இப்போது புழக்கத்திலுள்ள சிலிண்டரை விட பாதி எடை குறைவாகவே இந்த புது சிலிண்டர் இருக்கிறது.
அதோடு இது துருப்பிடிக்காத சிலிண்டர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருவள்ளூர் என நாட்டின் 28 நகர்களில் முதல் கட்டமாக இந்த புது வகை சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும் இதற்கான வரவேற்பு குறைவாக இருக்கிறது. இந்த சிலிண்டரை பெற விரும்பும் புது வாடிக்கையாளர்கள் ரூ.3,500 வைப்பு தொகையாக செலுத்தவேண்டும். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களோ பழைய வைப்பு தொகை ஏற்கனவே செலுத்தி இருப்பதால் ரூ.1,150 செலுத்தி புதிய சிலிண்டரை மாற்றிக் கொள்ளலாம்.
வைப்புதொகை ஒப்பீட்டு அளவில் அதிகம் இருப்பதால் இதை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் புது சிலிண்டர்களின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்தியன் ஆயில் டீலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் புது சிலிண்டரை முன்பதிவு செய்து பெறலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.