கேரள மாநிலத்தில் உள்ள கொட்டாக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போலீசாரால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக சந்தீப் என்ற நபர் கொட்டா குச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவரை வந்தனா தாஸ் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது திடீரென கத்தியால் அவரை கொடூரமான முறையில் குத்தி சந்தீப் கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் தற்போது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் கவுசர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த போது அவர்கள் கூறியதாவது, வேறு எங்கும் நடைபெறாத சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளை மூடி விடுங்கள். பாதுகாப்புக்காக சென்ற போலீசாரின் கையில் துப்பாக்கி இல்லையா. இந்த சம்பவம் தொடர்பாக மாநில டிஜிபி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு கொலை நடந்த மருத்துவமனைக்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் இருந்த போதும் அதை தடுக்கவில்லை. அவர்கள் தடுத்திருந்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்று நீதிபதிகள் கூறினார்.