கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில் இருந்து கட்டிட சுவர் 7 அடி உயரத்தில் இருந்ததால் நாயால் மேலே வர இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் நாய் அருகே சென்று அதற்கு பிஸ்கட் மற்றும் தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் நாடை பத்திரமாக மீட்டனர். தன்னை மீட்டு சந்தோஷத்தில் நன்றி தெரிவிக்கும் விதமாக நாய் வாலாட்டியபடி அங்கிருந்து சென்றது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் நாய் எப்படியோ மூன்றாவது மாடிக்கு வந்தது. இதனையடுத்து கட்டிட சுவரில் இருந்து நாய் சிலாப்பில் குதித்து மேலே வர முடியாமல் சிரமப்பட்டது. கடந்த 2 நாட்களாக விடுமுறை என்பதால் உணவும், தண்ணீரும் இன்றி நாய் அங்கேயே பரிதவித்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.