திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூரில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தமிழ்செல்வன் அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் தமிழ்செல்வனை வழிமறித்து லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் மோட்டார் சைக்கிள் நிறுத்துமாறு கூறினார்.

அதன்படி தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவர் கீழே இறங்கி சைகை கொடுத்தார். உடனே 2 பேர் ஓடி வந்தனர். பின்னர் மூன்று பேரும் இணைந்து தமிழ்செல்வனை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்தனர் அதில் ஒருவன் தமிழ்ச்செல்வனின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளான். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தமிழ்செல்வனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தமிழ்ச்செல்வனின் கல்லீரல் மற்றும் நுரையீரலுக்கு இடையே கத்தி சிக்கிக் கொண்டது. இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கல்லீரல் மற்றும் நுரையீரலுக்கு இடையே சிக்கி இருந்த கத்தி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது தமிழ்ச்செல்வன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.