ஸ்மார்ட்போன் பயன்பாட்டை 72 மணி நேரம் நிறுத்தி வைத்ததன் விளைவுகள் குறித்து ‘கம்ப்யூட்டர்ஸ் இன் ஹியூமன் பிஹேவியர்’ ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள், கைபேசியின் அதிகப்படியான பயன்பாடு என்பது போதைக்கு அடிமையாதலுக்கு நிகரானது என்பதைக் காட்டுகிறது. மூன்று நாட்களுக்கு கைபேசியை ஒதுக்கி வைப்பது, மூளையை ‘மீண்டும் கட்டமைக்க’வும், கவனத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் மனநல ஆலோசகர் டாக்டர் ஷௌனக் அஜிங்க்யா தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் சாதனங்களிலிருந்து வழக்கமான இடைவெளியை எடுத்துக்கொள்வது, உணர்ச்சி அறிவையும், உறவுகளையும் மேம்படுத்தி, நேருக்கு நேர் தொடர்புகளை ஊக்குவிக்கிறது. மேலும், இரவில் கைபேசித் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி, உடலின் இயற்கையான தூக்க சுழற்சியில் தலையிட்டு உறக்கத்தின் தரத்தைக் குறைப்பதைத் தடுக்க, தூங்கும் முன் ஒரு மணிநேரமாவது திரைகளைத் தவிர்ப்பது போன்ற எளிய டிஜிட்டல் விரதப் பழக்கங்களைப் பின்பற்றலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.