தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய கல்விக் கொள்கையில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது அப்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் அதை கடுமையாக எதிர்த்ததோடு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் தற்போது ஆளும் அரசாக மாறிய பிறகு தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு மறைமுகமாக எதிர்த்து விட்டு இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் தெரிவித்துள்ளார். திமுகவின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணமாக மாநில கல்விக் கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் விலகியுள்ளார். திமுகவின் நிலைப்பாடு மதில் மேல் பூனை என்ற கதையாக மாறிவிட்டது. மேலும் மாநில கல்வி கொள்கைக்கான உயர்மட்ட குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசிய கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா என்பது குறித்தும், இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.