
ராமநாதபுரம் மாவட்டம் அமமுக கட்சி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வது இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு இருப்பதால் காவல்துறையினரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, அதை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில், இந்தி திணிக்கின்றனர் என்று கூறுவது தவறானது. இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை அவர் நிச்சயம் செய்யப் போகிறார். திமுகவுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர், எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறினார்.