கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மாம்பழம், பப்பாளி, அன்னாச்சி உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் கால்சியம் கார்பயிர் கற்களை பயன்படுத்தியோ அல்லது வேதிப்பொருட்களை பயன்படுத்தியோ பழுக்க வைக்க கூடாது. அப்படி பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடும் பொது மக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணியாக அமைகிறது.

எனவே விதிமுறைகளை மீறி செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மூன்று மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.