கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 27 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக அப்பெண் மருத்துவரிடம் தெரிவித்தார். இதனால் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் 10 சென்டிமீட்டர் அளவில் ஏதோ ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரது வயிற்றில் ஹீமோடோமோ கட்டி போன்ற பொருள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணுக்கு சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் செலவுக்கு பயந்த தம்பதி, காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்து விட்டனர். அதன் பிறகு, அவரால் நிற்க, நடக்க, குழந்தைகளை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பெண்ணுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது வயிற்றில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். இதனால் அவர் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஜனவரி 25ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை மூலம் அந்த துணி அகற்றப்பட்டது. இதையடுத்து அவர் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார்.